“அனைத்து நதிகளையும் இணைப்பதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு” - பிரேமலதா விஜயகாந்த்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

காவிரி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பாஜகவும் அதிமுகவும் பிரிந்து 2 நாட்கள்தான் ஆவதால், இதனை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பரும் கிடையாது. அந்த இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சனை கிடையாது. இரு தலைவர்கள் இடையேதான் பிரச்சனை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தேமுதிக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்.

காவிரி பிரச்சினை 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றது. ஆனால், இதுவரை எந்தத் தீர்வு கிடைக்கவில்லை. பல பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சிகள் மாறவில்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணத் தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் பயிர் வாடியதைக் கண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மகளின் கல்விச் செலவுக்கு நிதி உதவியும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினை தொடர்பாகத் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE