“கர்நாடக காங். அரசு மீது நம்பிக்கை உள்ளது” - காவிரி பிரச்சினையில் மாணிக்கம் தாகூர் எம்.பி கருத்து

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாக்கூர் எம்.பி கூறியுள்ளார்.

சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாஜகவால் அரை மனதோடு கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருத்தம அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு பல லட்சம் தொழிலாளர்களையும், இந்தியாவின் அடையாளமாக உள்ள பட்டாசு தொழிலையும் பாதிக்கும். பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசு தொழிலுக்கான தொல்லை தொடரும் என்பது தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது.

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கர்நாடக பாஜக தலைவர்கள் தூண்டிவிட்டுதான், அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அது நோட்டாவுக்குதான் போட்டியாக இருக்கும்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என கூறாமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று அண்ணாமலை போட்டியிட வேண்டும். தமிழக உயர்கல்வி துறையில் தேவை இல்லாத குழப்பத்தை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார். கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் நபர்களை திணிக்க ஆளுநர் ரவி முயற்சி செய்து வருவது கண்டிக்கத்தக்கது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE