சென்னை: "திருப்பூரை டல் சிட்டியாக மாற்றிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும். தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்பாக சுமார் 16,532 கோடி ரூபாய் மதிப்பிலான 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மீண்டும் எனது தலைமையிலான அதிமுக அரசு, 2019-ஆம் ஆண்டு இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. தவிர, கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரை அழைத்து நானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, அவசர கால கூடுதல் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 3.70 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டன.
திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டுகால இருண்ட ஆட்சியில் பொருளாதார மந்தநிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஆளும் கட்சியினரின் அராஜகம் என இவற்றுடன் அல்லாடிக் கொண்டிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள், தற்போது இரண்டாம் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
தாள முடியாத மின் கட்டண உயர்வால், பொருட்களின் அடக்கவிலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களின் தலையில்தான் விழுகிறது என்றும், இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் சுமார் 25 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்திவரும் தொழில் முனைவோர் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
25.9.2023 அன்று நடைபெற்ற ஒருநாள் போராட்டத்தினால், சுமார் 9,500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 கோடி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும் தொழில் அமைப்பு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், கடுமையான மின்கட்டண உயர்வையும், அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசாமல் எதுகை மோனையில் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட ‘திருப்பூர்’, ‘டல் சிட்டி’ஆக மாறிவிட்டது என்றெல்லாம் விமர்சித்துள்ளார். திருப்பூரை டல் சிட்டியாக மாற்றிய பெருமை பொம்மை முதல்வர் ஸ்டாலினையே சாரும். அதே நேரத்தில், தன்னுடைய கையாலாகாத் தனத்தை மறைக்க யார் யார் மீதோ பழி போடுகிறார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் அதற்கு நேர்மாறான ஒரு பேச்சு என்று நாடகமாடும் ஸ்டாலினின் திமுக ஆட்சியில், தொழில் முனைவோர் தங்கள் அனைத்துத் தொழில்களையும் இழந்து, தங்களை நம்பிய தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழக முதல்வர் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், தங்களது எந்தக் கோரிக்கையும் அரசினால் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று 25.9.2023 அன்று அறிவித்தபடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தினார்கள். எனினும், இந்த திமுக அரசு இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்று, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மீண்டும் உச்சம்பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago