சென்னை: "கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப்பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்" என்று டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது முதல்வர் பேசியது: "அரசாங்க வேலைக்கான மவுசு எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று எப்படியாவது அரசுப் பணி வாங்கிட வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் பெரும் கனவு. அந்த வகையில் இன்று இங்கு வந்துள்ள உங்களின் லட்சியக் கனவு நிறைவேறியுள்ளது. அதன் அடையாளம் தான் உங்கள் கையில் உள்ள பணி நியமன ஆணை. இன்று உங்களின் தாய், தந்தை அடையும் மகிழ்ச்சியை நானும் கொண்டுள்ளேன்.
ஒருவருக்கு வேலை கிடைக்குமேயானால் அதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பயன்பெறும். பல தலைமுறைக்கும் பலனளிக்கும். அந்த வகையிலான பலனளிக்கும் பணி நியமன ஆணை தான் உங்களுக்கு ஒப்படைத்துள்ளோம். நீங்கள் லட்சத்தில் ஒருவராக தேர்வாகி உள்ளீர்கள். அப்படி லட்சத்தில் ஒருவராக தேர்வான உங்கள் ஒவ்வொருவரின் இலக்கும் மக்கள் சேவையாக மட்டுமே இருக்க வேண்டும். மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே மக்களாட்சி. அந்தவகையில் அரசாங்கம் தீட்டும் எல்லாத் திட்டங்களும் மக்களின் நன்மைக்காகத் தான்.
அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் எந்தவித குறையுமின்றி கொண்டு சேர்க்க வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்வான அனைவருக்கும் பாராட்டுகள். நீங்கள் எல்லோரும் இப்போது அரசு ஊழியர்களாக ஆகியுள்ளீர்கள். அரசு ஊழியர்களின் எத்தனையோ பேர் தன்னலம் பாராமல் பணியாற்றுகின்றனர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டை நான் இந்த மேடையிலேயே சொல்லியாக வேண்டும். கடந்த 23 ஆம் தேதி நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். இறக்கும் முன்னர் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடத்தப்படும் என்று கூறியிருந்தேன்.
அந்த அறிவிப்பின்படி மனிதநேயத்துடன் உடல் உறுப்பு தானம் செய்து அரசு மரியாதை பெற்ற முதல் நபர் ஓர் அரசு ஊழியர் தான். தேனி மாவட்டம் சின்னமன்னூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வடிவேலின் உடலுக்கு நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருக்கு நான் தனிப்பட்ட வகையில், அரசு ஊழியர்களாகிய உங்களின் சார்பிலும் நன்றி செலுத்திக் கொள்கிறேன். ஒரு இயந்திரம் செயல்பட ஒவ்வொரு பாகமும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுபோலத்தான் அரசு எனும் இயந்திரம் சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
தகுதியான அரசு அலுவலர்களை தெரிவு செய்ய டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்ற முகமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக் கணக்கானோர் எழுதுகின்றனர். அதனால் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆன்ஸ்க்ரீன் இவாலுவேஷன் முறை பின்பற்றப்படுகிறது. 2021 ஆம் ஆண்டும் தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்ற பின்னர், தமிழ் கட்டாய தகுதித் தேர்வு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழக மாணவர்களுக்காக இது கொண்டுவரப்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களிலும் இது நடைமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில், காலிப் பணியிடங்களை தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப புதிய சட்டத்தை இயற்றி, அதன்மூலம் தேர்வான உங்களுக்கும் உரிய பணி ஆணையை இன்று வழங்குகிறேன். தமிழகத்தில் இருக்கின்ற ஒன்றிய அரசு துறைகளான ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிகள் ஆகியவற்றில் இருக்கும் காலிப் பணியிடங்களை, நிரப்பும்போதும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதமும் நான் எழுதியிருக்கிறேன். ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழில் நடத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று ஸ்டாஃப் செலக்சன் கமிசன் வாயிலாக 10 மற்றும் 12ம் வகுப்பு தரத்தில், பண்முகப் பணியாளர் (Multi Tasking Staff) அந்த பதவிக்காக நடத்தும் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்தலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தமிழகத்துக்கு, தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்காக திமுக அரசு பெற்றுத் தந்திருக்கிற வெற்றியாகவே கருதுகிறேன்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இது நிர்ணயித்த 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவில் தனியார் நிறுவனங்களில் வழங்கும் பயிற்சியை தமிழக இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, மற்றும் வங்கிப் பணி ஆகியவற்றுக்காக 5000 பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி திட்டத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது.
இதில் பயிற்சி பெற்ற 90 நபர்கள், ஒருங்கிணைந்த வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட முதுநிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மண்டல ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கானத் தேர்வில் 40 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குடிமைப்பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆயிரம் பேருக்கு மாதம்தோறும் ரூ.7,500 மற்றும் பயிற்சி வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இது தொடங்கப்படும்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாநில அரசுப் பணிகளைப் போலவே ஒன்றிய அரசுப் பணிகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர்வார்கள். இந்த அரசு அமைந்த கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப்பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் நிச்சயம் அளிக்கும். அரசுத் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த அரசு சமூகநீதி காக்கும், மக்கள் நலன் பேணக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago