காவிரி விவகாரம் | உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் - துரைமுருகன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று கூறியதாவது: கடந்த 13-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த15 நாள் கெடு செப்.27-ம் தேதியுடன் (இன்று) முடிகிறது. இடையே கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்தாலும், நமக்கு தரவேண்டிய தண்ணீரை தந்துகொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் 2,500 கனஅடி, 3,000 கனஅடி என திறக்கப்பட்டது. 26-ம் தேதி காலை நிலவரப்படி 7,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 11,000 கனஅடி வரவேண்டி உள்ளது. நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். அதன்படி, நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ஒழுங்காற்று குழு பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE