சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்.14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்க உள்ளது. இதில், சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், பெண் உரிமைக்காகவும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசு வேலைவாய்ப்பு, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை தொடர்பான சட்டங்கள், அவரது ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.
தற்போது முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிமூலமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்கள், மகளிரை அர்ச்சகராக்கியது என பெண்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்டகால கோரிக்கை. ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால மறதிக்கு பிறகு, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நிறைவேறியுள்ளது. அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வராமல்,2029-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
உடனே அமல்படுத்த வேண்டும்: எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்த வலியுறுத்துவது அவசியம். இதை கருத்தில் கொண்டும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் அக்.14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்க உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பெண்உரிமை போற்றும் இந்த மாநாட்டில் திமுக மகளிர் அணியினர் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago