தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும்: சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: தமிழகத்தில் அடுத்த சில மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மதரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதேபோல், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிகமிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதற்காக, காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுண்ணறிவுப் பிரிவினர், தகவல்களை உடனுக்குடன் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவினருக்கு வழங்கி எந்த ஒரு சட்டம் -ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால்மட்டுமே அவர்களின் கல்வி மற்றும்பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவே, பள்ளி, கல்லூரிகள், பெண்கள் அதிகம் கூடும் இதரஇடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவை குறைந்துள்ளன. இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை, பொறுப்புணர்ச்சியுடன் அவர்கள் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நம் மாநிலம், தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில்வளம் மிகுந்த மாநிலமாக, மேலும்வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளைப் பெரிதும் குறைப்பதோடு, அவற்றைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் பெ.அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE