சுற்றுலாத் துறையை புதிய உச்சத்துக்கு உயர்த்த தமிழ்நாடு சுற்றுலா கொள்கை: சென்னை புறநகரில் 100 ஏக்கரில் ‘தீம் பார்க்’

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுலாத் துறையில் தமிழகத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுலாத் துறை, வேலைவாய்ப்பு அளிப்பதுடன், அன்னியச் செலாவணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை உயர்த்துவது, சுற்றுலாப்பயணிகள் தங்கும் காலத்தை அதிகரிப்பது, அன்னியச் செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக்கவரும்வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாகொள்கை உருவாக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா கொள்கையை நேற்றுவெளியிட்டார்.

சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்து வழங்குவதன் மூலம், தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்கள் சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

குறிப்பாக, சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும்தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடுகள் மற்றும்கண்காட்சிகள் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலாத் துறை செயலர் க.மணிவாசன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை புறநகரில் 100 ஏக்கரில் ‘தீம் பார்க்’: தனியார் பங்களிப்பில் சென்னை புறநகரில் 100 ஏக்கரில், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற பூங்காவை அமைக்கசுற்றுலாத் துறை முடிவெடுத்துள்ளது. சர்வதேச முக்கியத்துவம் பெறும்வகையில் அமைக்கப்படும் இந்த மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவில், அட்வென்ச்சர் ரைடிங், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, சர்வதேச கண்காட்சிகள், விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்த தகவல்கள் சுற்றுலா கொள்கையில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE