பல்கலை. விவகாரத்தில் உயர்கல்வி துறை தலையிட அதிகாரமில்லை: துணைவேந்தர் நியமன சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலப் பல்கலைக்கழகங்களின் விவகாரங்களில் தலையிட உயர்கல்வித் துறைக்கு அதிகாரமில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்வதற்கான தேடல் குழுவை அமைத்து தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலை.களின் வேந்தருமான ஆர்.என்.ரவி கடந்த செப். 6-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டார். அந்த தகவல் ஆளுநர் மாளிகையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு, செய்திக்குறிப்பு மூலம் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தச்சூழலில் விதிகளுக்கு புறம்பாக சென்னை பல்கலை. துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரை தவிர்த்துவிட்டு உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அறிவிக்கையானது செப்.13-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல் அதை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும்உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாகும். பல்கலை. வேந்தராக ஆளுநர் இருக்கும் சூழலில், அவரின் ஒப்புதல் பெறாமல் பல்கலை. விவகாரங்களில் செயல்படுவதற்கு உயர்கல்வித் துறை செயலருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE