சங்கீதா ஹோட்டல்ஸ் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா பெயர்களில் ஹோட்டல்கள் நடத்த இடைக்காலத் தடை

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சங்கீதா, சங்கீதா வெஜ்' என்ற வணிக முத்திரையை காப்பியடித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களில் ஹோட்டல்களை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் சங்கீதா மற்றும் சங்கீதா வெஜ் என்ற பெயர்களில் ஹோட்டல் நடத்தி வரும் சங்கீதா கேட்டரர்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எங்களது நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையான சங்கீதா மற்றும் சங்கீதா வெஜ் என்ற பெயர்களை காப்பியடித்து எங்களது முன்னாள் உரிமதாரர்களான ரஷ்னம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோர் கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், எங்களுக்குமான உரிம ஒப்பந்தம் ஏற்கெனவே காலாவதியாகி விட்டது.

இந்நிலையில் எங்களது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், எங்களது விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் ‘சங்கீதா வெஜ்’ என்ற எங்களது வணிக முத்திரையைக் காப்பியடித்து அவர்கள் இதுபோன்ற பெயர்களில் ஹோட்டல்களை நடத்த தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘‘ சங்கீதா ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்த வழக்கைத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனவே சங்கீதா, சங்கீதா வெஜ் என்ற வணிக முத்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களிலோ அல்லது சங்கீதா என்ற பெயரின் முன்போ, பின்போ எழுத்துகளை சேர்த்து ஹோட்டல்களை நடத்தக்கூடாது'' என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE