போலீஸ்காரர் அண்ணாமலைக்கு முதல்வராக பேராசை - நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்

By ஆ.நல்லசிவன்

பழநி: ‘இரண்டு ஆண்டுகள் மட்டுமே கட்சியில் இருந்த போலீஸ்காரர் அண்ணாமலைக்கு முதல்வராக பேராசை’ என பழநியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று (செப்.26) அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது.

முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, தலைமை கழக பேச்சாளர்கள் மருதராஜ், காளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துச்சாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதி எம்எல்ஏவுமான விஸ்வநாதன் பேசியதாவது: அதிமுக வளர்ச்சிக்கு தடையாக இருந்த பாஜக கூட்டணியில் இருந்த விலகியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ந்து வரும் பாஜக, அதிமுகவையே அழிக்க நினைக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை.

அண்ணாமலை அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே கட்சியில் இருந்த போலீஸ்காரர் அண்ணாமலைக்கு முதல்வராக வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. என் மண் என அண்ணாமலை உரிமை கொண்டாட முடியாது. இந்த மண் தமிழ்நாட்டு மண். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவை முன்னிலைப்படுத்தி நடைபயணம் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் அண்ணாமலை பெயரை அனைவரும் சொல்ல வேண்டும் என்பதற்காக நடைபயணம் செல்கிறார்.

முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுக தனது சுயமரியாதையை இழந்து, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் மக்களின், தொண்டர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மத்தியில் பிரதமராக மோடியும், தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராக இருக்க வேண்டும் என்று பாஜக பேராசைப்படுகிறது.

தற்போது பாஜக எனும் வேண்டாத பொருளை தூக்கி எரிந்ததால் அதிமுக சுதந்திரமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு, மது கலாச்சாரத்தால் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். 50% தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி விட்டு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக திமுக மக்களை ஏமாற்றி வருகிறது.

மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது தான் கச்சத்தீவும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மற்றும் கச்சத்தீவை மீட்க போராடுவோம் என திமுக நாடகமாடி வருகிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மத்திய அரசு மீதும், விலை வாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் திமுக அரசு மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பழநி நகர கழகம் சார்பில் நத்தம் விஸ்வநாதனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகம்மது நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE