அதிமுகவும் பாஜகவும் குழப்பத்தில் உள்ளன: தருமபுரி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: அதிமுக-வும், பாஜக-வும் குழப்பத்தில் இருப்பதாக தருமபுரியில் நடந்த திமுக இளைஞரணி செயல்வீரர் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தருமபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் திமுக இளைஞரணி சார்பில் நேற்று (செப்-26) தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியது: 2007-ம் ஆண்டு நெல்லையில் திமுக இளைஞரணி முதல் மாநாடு நடந்தது. இந்நிலையில், வரும் டிம்பரில் சேலத்தில் இளைஞரணியின் 2-ம் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்குமாறு அழைக்கவே வந்தேன்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காண சென்ற அண்ணாவிடம் தருமபுரி எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார் கருணாநிதி. அப்போது தருமபுரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்ததையொட்டி அவ்வாறு கேட்டுள்ளார். அதே தருமபுரியில் பின்நாளில் மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இப்படி திமுக-வுக்கும் தருமபுரிக்கும் என்றும் நெருக்கமான உறவு உண்டு. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக-வுக்கு வெற்றி தேடித் தந்ததுபோல, வரவிருக்கும் தேர்தலிலும் மகத்தான வெற்றியை தேடித் தரும் வகையில் இளைஞரணியினர் செயலாற்ற வேண்டும். கடந்த சட்டப் பேரவை தேர்தலைப் போன்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

இந்த அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற முத்தான திட்டங்கள் குறித்து மக்களிடையே இளைஞரணியினர் தொடர்ந்து பேச வேண்டும்.

அதிமுக-வும், பாஜக-வும் குழப்பத்தில் உள்ளன. காலையில் கூட்டணி இல்லை என ஒருவர் கூறுவதும், மாலையில் கூட்டணியில் தான் இருக்கிறோம் என ஒருவரும் கூறுவதுமாக உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரகசியமாக வேறு மாநிலங்களுக்கு சென்று விமானம் ஏறி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்துள்ளனர். இரு கட்சியினருமே குழப்பத்தில் இருக்கின்றனர். மேலும், அவர்கள் மக்களையும் குழப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பாஜக-வின் பல்வேறு அணிகளுள் ஒன்றாக மாறிவிட்டது. வரவிருக்கும் மக்களை தேர்தலின்போது இவ்விரு கட்சியினரும் இணைந்தே கூட வாக்குக் கேட்டு வருவர். ஆனால், இவ்விரு கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். கடந்த சட்டப் பேரவை தேர்லில் அடிமைகளை விரட்டினோம். வரவிருக்கும் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டுவோம். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சி முடிவில், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 கோடியும், மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரூ.26 லட்சமும் சேலத்தில் நடக்கவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நிதியாக வழங்கப்பட்டது. மேலும், வெள்ளி வாளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஷ்வரன்(கிழக்கு), சிவகுரு (மேற்கு) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பெண்கள் முன்னேற்றத்துக்கான தடைகளை உடைத்து வருவது திமுக அரசு தான்: முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று (செப் 26) மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டை(ஏடிஎம் அட்டை) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, "மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் தற்போது இந்திய அளவில் பாராட்டை பெற்று வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான உரிமைகள் குறித்து பெரியார் கண்ட கனவுகள் அனைத்தையும் திமுக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய வடிவங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு நிலவி வந்த தடைகளை திமுக அரசு தான் அகற்றி வருகிறது. பெண்கள் கல்வி பயில பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் ஒன்று புதுமைப் பெண் திட்டம். அதேபோல, தமிழகம் முழுக்க 31 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள் கல்வி கற்று பொருளாதாரத்தில் உயர வேண்டும். முற்போக்காக சிந்திக்க வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடவும் முன்வர வேண்டும். இதன்மூலம் தங்களுக்கான உரிமைகளை மகளிர் பெற முடியும். மேலும், பெண்கள் முற்போக்காக சிந்திக்கும்போது அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பர். இதனால் மொத்த தமிழ் சமுதாயமும் முன்னேற முடியும். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடந்த சிறுதானிய திருவிழாவை தொடங்கி வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகள் 314 பேருக்கு ரூ.25.26 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் திவ்யதர்சினி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

பின்னர், தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதி என்ற பெயரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE