‘கிங் மேக்கர் இபிஎஸ்’, ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ - மதுரையில் அதிமுக - பாஜகவினர் போஸ்டர் யுத்தம்!

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் ‘கிங் மேக்கர் இபிஎஸ்’ என்று அதிமுகவினரும், ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ என்று பாஜகவினரும் என நகர் முழுவதும் விதவிதமான வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டி மோதி கொள்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த கட்சி எந்த பக்கம் தாவும் என்ற பரபரப்பு ஏற்படுவதற்கு முன்பே, பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக வெளியேறியது. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, அண்ணா போன்றோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

இதனை பொறுத்துக் கொள்ளமுடியாமல் பொங்கி எழுந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை அண்ணாமலை கேலி கிண்டல் செய்ததோடு நிற்காமல் கூட்டணிக்காக சுயமரியாதையை இழந்து நிற்க மாட்டோம் என்றார். மேலும், தான் சொன்ன கருத்துகளை, நிலைபாடுகளை வாபஸ் பெற முடியாது எனவும் கூறினார். அண்ணாமலையின் இத்தகைய போக்கு கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனாலும், ஓபிஎஸ்-டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முடிவெடுக்கவே, அதிருப்தியில் அதிமுக வெளியேறியதாகவும் மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைவர்கள் அளவில் ஒருவொருக்கொருவர் விமர்சனம் செய்து கூட்டணியை முறித்தநிலையில், தற்போது தமிழக அளவில் இரு கட்சிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் அளவில் வாட்ஸ்ப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மோதி கொள்வதோடு வீதிகளில் இறங்கி போஸ்டர் ஒட்டியும் மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அரசியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சரி, மதுரையில் போஸ்டர்களில் வார்த்தை ஜாலங்களை புகுத்து எதுகை மோனையுடன் கருத்துகளை சொல்லும் வழக்கத்தை வைத்துள்ளனர். அந்த வகையில் அஜித்-விஜய் ரசிகர்கள் முதல், அதிமுக-திமுக, திமுக-பாஜக போஸ்டர் மோதல் சுவாரஸ்யமாக இருக்கும்.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தநிலையில் மதுரையில் இரு கட்சியினரும் சமூக வலைதளங்களை தாண்டி போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவினர், ‘கிங் மேக்கர் இபிஎஸ்’ என்றும், பாஜவினர் ‘புலி போல் தலைவர்கள் இருக்க, புலிகேசி ஆதரவு எதற்கு, போட்றா வெடிய’ என போஸ்டர்களில் வசைப்பாடி வருகின்றனர்.

அதிமுகவினர் இதுவரை மோடி பிரதமர் என கோஷமிட்டு வந்தநிலையில், தற்போது ‘கிங் மேக்கர் இபிஎஸ்’ என ஒட்டியதற்கு, மத்தியில் இனி அதிமுகதான் பிரதமரை முடிவு செய்யும் என போஸ்டர் மூலம் தங்கள் கருத்துகளை கூறத் தொடங்கியிருக்கிறார்கள். நிர்வாகிகள், தொண்டர்கள் இப்படி சமூக வலைதளங்களை தாண்டி போஸ்டரில் மோதி கொள்ளும்நிலையில் மற்றொரு புறமும் பாஜக-அதிமுக தலைவர்கள் மறைமுக சமரசம் செய்யும் படலமும் நடப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE