துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர் கல்வித் துறை அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த 6-ம் தேதி சென்னைப் பல்கலைகழகத்தின் வேந்தரான ஆளுநரால் பல்கலைகழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் - தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு ராஜ்பவனின் இணையதளத்திலும் வெளியிடபட்டது. மேலும், செய்திக் குறிப்பின் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல், அதனை மீறும் வகையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், யூஜிசி பரிந்துரைகளை தவிர்த்து தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளார். 13-ம் தேதி அன்று அரசிதழில் வெளியான இந்த அறிவிப்பு யூஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது.

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதலின்றி அமைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பல்கலைகழக விவகாரங்களில் உயர்கல்வித் துறைக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேந்தர் (ஆளுநர்) கேட்டுகொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? - கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடல் குழுக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியமிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல்கலை. துணைவேந்தர் தேடல் குழு தொடர்பாக யுஜிசி புதிய பரிந்துரைகளை வெளியிட்டது. அதில், ‘தேடல் குழுவில் 3 முதல் 5 பேர் வரை இடம் பெறலாம். அவற்றில் ஒருவர் யுஜிசி தலைவரால் நியமிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது.

இதையடுத்து துணைவேந்தர் தேடல் குழுவில், யுஜிசி பிரதிநிதியை நியமனம் செய்வதற்கான திருத்தங்களை மேற்கொள்ள ஆளுநர் தரப்பில் இருந்து உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உயர்கல்வித் துறை ஒப்புதல் அளிக்காததால் தேடல் குழு தங்கள் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, துணைவேந்தர் பதவிகள் காலியாக கோவை பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கான தேடல் குழுக்களில் யுஜிசிசார்பிலான ஒரு உறுப்பினரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். மறுபுறம் ஆளுநரின் தன்னிச்சையான இந்த உத்தரவு மரபுமீறிய செயலாகும். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

அதன்பின், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழுவின் விவரங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, உறுப்பினர்களாக பல்கலை. சிண்டிகேட் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது சார்ந்து ஆளுநர் வெளியிட்ட தேடல் குழு அறிவிப்பில் 4-வது உறுப்பினராக இடம்பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர், தமிழக அரசு இடையேயான தொடர் மோதல்கள் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்