உரிமைத் தொகை ரூ.1,000 முழுவதும் வங்கியில் அபராதமாக வசூல்: திருப்பூர் பெண் குற்றச்சாட்டு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வங்கியில் வரவு வைக்கப்பட்ட உரிமைத்தொகை ரூ.1,000 முழுவதும் அபராதமாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் வஞ்சிபாளையம் முருகம்பாளையம் அருகே எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் மனோகரன். தனியா பள்ளி வாகன ஓட்டுநர். இவரது மனைவி வசந்தி (57). தம்பதியருக்கு இரு மகள்கள். மகள்களுக்கு திருமணமான நிலையில் வசந்தி கூலி வேலைக்கு சென்றுவந்தார். தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார்.

கடந்த 14-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பணம் இவரது வங்கிக் கணக்குக்கு வந்தது. இதையடுத்து, பணம் எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது இவரது கணக்கில் ரூ.36.46 மட்டும் இருந்தது. இது தொடர்பாக வசந்தி கூறியதாவது: “கடந்த 14-ம் தேதி வரவு வைக்கப்பட்ட நிலையில், 15-ம் தேதி பணத்தை 3 தவணைகளில் தலா ரூ.236-ஐ எடுத்துள்ளனர். இது தொடர்பாக எனக்கு எந்தத் குறுந்தகவலும் அலைபேசிக்கு வரவில்லை. வங்கியில் கேட்டால், அபராதத் தொகை என அனுப்பி வைத்துவிட்டனர்.

தமிழ்நாடு அரசு சொல்லியதை சொன்னால், இது தனியார் வங்கி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக இருந்தும், என்னால் அந்த திட்டத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வங்கி மேலாளர் ரவி கூறும்போது, “பாதிக்கப்பட்டவரின் புகாரை பெற்று, பரிந்துரைக்குமாறு கடிதம் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE