புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இதுகுறித்து விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவில், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித் துறைக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்டவில்லை. எனவே, 2018-ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில், "வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை பெற முடியாது. எனவே, தனக்கு நீதி வழங்கும் வகையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும். மேலும், கடந்த 2018-ம் ஆண்டு, தான் அளித்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என நம்பிய நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின், காவல் துறையினர் நிறம் மாறி விட்டது" என்று வாதிடப்பட்டது.

ஜெயவர்த்தனை இந்த வழக்கில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில் பிரமாணப் பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை நடைபெறவில்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருப்பதால் மேல் முறையீட்டு வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது. ஜெயவர்த்தன் 2018-ம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, அதை முடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, அவர் அளித்துள்ள புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்