‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்: பேராசிரியர் அருணன்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: குலத்தொழிலை வலியுறுத்தும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கூறினார்.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.சசிகலா, பொருளாளர் ஜா.நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் சிறப்புரை ஆற்றினார். இதில், தீண்டாமை முன்னணி மாவட்டச் செயலாளர் பால சுப்பிரமணியம், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.வேல்தேவா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.பாலமுருகன் ஆகியோர் பேசினர். மாநகராட்சி தொழிலாளர் சங்க பொருளாளர் கே. கருப்பசாமி நன்றி கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேராசிரியர் அருணன் கூறும்போது, "மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை வலியுறுத்தும் திட்டம். 1954-ல் ராஜாஜி கொண்டுவர நினைத்த திட்டம். இத்திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 54 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பரம்பரை பரம்பரையாக தொழில் செய்வோருக்கு மட்டுமே கடனுதவி என்பது குலத்தொழிலை வளர்ப்பதாகும். குலத்தொழிலையும், சாதியத்தையும் முன்வைப்பதாகும்.

உயர் சாதியில் உள்ளவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வரலாம். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களுடைய குலத்தொழில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது சாதியத்தை நிலை நிறுத்தும் வேலை. எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE