பெங்களூரு பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், மாநில எல்லையில் தமிழக பேருந்துகள் தடுத்து நிறுத்தம் செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு 25 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு கர்நாடக அரசு மறுத்ததால், காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் இன்று சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர்.

ஆனால், கர்நாடக அரசு வழக்கம்போல் கர்நாடக பேருந்துகள் இயங்கும் என அறிவித்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணி வரை ஓசூரில் நிறுத்தப்பட்டன. இன்று காலை தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் குறைந்த அளவே ஓசூருக்கு வந்தன.

ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் மாநில எல்லையான ஜூஜூவாடி வரை செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து, கர்நாடக மாநில ஆட்டோக்கள் மற்றும் நடந்து சென்றும் பெங்களூரு சென்றனர். அதேபோல் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்து பெங்களூருவுக்கு பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.

ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு தமிழக பதிவெண் கொண்ட கார், வேன், லாரிகள், சுற்றுலா வாகனம், இருசக்கர வாகனங்களை மாநில எல்லை ஜூஜூவாடியில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். இதனால், பல்வேறு பணிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேலும், மாநில எல்லையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் எஸ்பி சரோஜ் குமார் தாகூர் ஆகியோர் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தனர். டிஎஸ்பி பாபு பிரசாத், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு இருதயம் தொடர்பான சிகிச்சைக்காக வாடகை கார் வைத்து சென்றோம், மாநில எல்லையில் தமிழக போலீஸார் தமிழக பதிவெண் காரை அனுமதிக்காததால், வேறு வழியின்றி இறங்கி ஆட்டோவில் ஏறி அத்திபள்ளியிலிருந்து கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தில் செல்லும் நிலை உள்ளது.

இதனால், உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. எங்களைப் போன்றே பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE