எதிர்ப்பை மீறி தொடங்கும் கோரிப்பாளையம் உயர்மட்ட பால கட்டுமானம்: மதுரை மக்கள் அதிருப்தி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190.40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தை இறுதி செய்யும் பணி நடக்கிறது. மக்களின் எதிர்ப்பையும் மீறி ஜனவரியில் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம், வாகனப் போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படப்படவில்லை. நகரின் இதயமாகத் திகழும் கோரிப்பாளையத்தில் கடந்த 25 ஆண்டு களாக வாகன நெரிசல் நீடிக்கிறது. தினமும் கோரிப்பாளையம் சிக்னல் சந்திப்பை கடந்து செல்ல பொது மக்கள், வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.

போக்குவரத்து மிகுந்த நேரத்தில் (பீக் ஹவர்ஸ்) மட்டுமில்லாது காலை முதல் இரவு வரை இந்தச் சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கு நீண்ட தொலை வுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், அமைச்சர்கள், ஆட்சியர் இப் பகுதியில் வந்தால் அவர்கள் தடையின்றி செல்வதற்கு போலீ ஸார் உதவுகின்றனர். இதனால், பொதுமக்களின் நரக வேதனை அமைச்சர்களுக்கு தெரிவதில்லை.

இந்நிலையில், கோரிப் பாளையம் சிக்னல் சந்திப்பில் ரூ.190.40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கத் திட்டமிட்ட ப்பட்டது. இந்தத் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. தற்போது தான் திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டு சமீபத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டது. தற்போது ஒப்பந்தம் கோரிய நிறுவனங்களை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன.

ஆனால், தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரையில் கட்டவிருந்த உயர்மட்டப் பாலத்திட்டம் கைவிடப்பட்டு தற்போது தமுக்கம் மைதானம் கருப்பண்ணசாமி கோயில் முன்பிருந்து பாலம் தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் கோரிப்பாளையத்தின் அடிப்படை பிரச்சி னைகளை ஆராய்ந்து பொது மக்கள், வாகன ஓட்டுநர்களுக்கு உபயோகப்படும் வகையில் உயர் மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கோரிப்பாளையம் உயர் மட்டப் பாலத்துக்கு ஒதுக்கப் பட்ட ரூ.190.40 கோடியில் 156.60 கோடி கட்டுமானப் பணிக்கு பயன் படுத்தப்பட உள்ளது. மீதமுள்ள தொகை, கட்டிட வடிவமைப்பு மற்றும் இதர செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒப்பந்தம் கோரிய நிறுவனங்களை இறுதி செய்து ஒரு நிறுவனத்தை தெரிவு செய்யும் பணி நடக்கிறது. தகுதியான நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்படும். ஜனவரியில் கோரிப்பாளையம் உயர்மட்டப் பாலம் பணிகள் தொடங்கிவிடும்’’ என்றார்.

கத்திப்பாரா அடுக்கு பாலம் போன்று அமைக்கப்படுமா?: மதுரையில் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்பட்ட பாலங்கள் எதுவுமே வாகன நெரிசலைத் தீர்க்கும் வகையில் மக்களுக்கு முற்றிலும் பயன்படும் விதமாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

1970-களில் அமைக்கப்பட்ட மதுரைக் கல்லூரி, ஆண்டாள்புரம் பாலங்கள் அப்போது தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டதால் இன்றளவும் அந்தப் பாலம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், மெஜுரா கோட்ஸ் பாலம், தெற்குவாசல் - வில்லாபுரம் பாலம், பழங்காநத்தம் - டிவிஎஸ் நகர் மேம்பாலம், பைபாஸில் அமைக்கப்பட்ட காளவாசல் மேம்பாலம் போன்றவை திட்டமிடாமல் அமைத்ததால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை.

மாறாக, இந்தப் பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. கோரிப்பாளையம் பகுதியில் சென்னை கிண்டி பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையால் அமைக்கப்பட்ட கத்திப்பாரா அடுக்கு பாலம் (Clover Leaf) போன்று அமைத்தால்தான் மதுரை நகரின் இன்றைய நெரிசலுக்கும், எதிர்கால நெரிசலுக்கும் தீர்வு காண முடியும்.

ஏற்கெனவே காளவாசல் பாலம் அமைப்பதற்கு முன் அதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியும் அப்போதைய அமைச்சர்கள் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதேபோன்ற நிலைமைதான் தற்போதும் தொடர்வதால் கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பால திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலை தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE