தஞ்சை | காத்திருப்புப் போராட்டத்துக்கு வந்த விவசாயிகள் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: 40 பேர் வலுக்கட்டாயமாக கைது

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகளைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 157 கோடி நிலுவைத் தொகையைப் புதிய ஆலை நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் போலியாக திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய சுமார் ரூ. 115 கோடியை தள்ளுபடி செய்து, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து தீர்த்து வைக்க வேண்டும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடர்ந்து 301 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இக்கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரும் முடிவு செய்தனர்.

அதன் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் டி. ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் உள்பட 40 விவசாயிகளைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாகப் பிடித்து கைது செய்தனர். இதனால் காவல் துறையினருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE