சென்னை: உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்துல் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர்.
வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தும் கட்டாயத்துக்கு தள்ளுவதை ஏற்க முடியாது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது.
2009ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.
» தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
» “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது” - ஜவாஹிருல்லா கருத்து
ஆனால், 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.
ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. 2009ம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப் பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009ம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200 என்பது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது.
2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்த பட்ச கல்வித் தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது.
இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்தியபோது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்." என ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago