தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. சிலை கரைப்புக்கு கடந்த 18 முதல் 24-ம் தேதி வரை போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். நேற்று முன்தினம் சிலை கரைப்பு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். சென்னை, ஆவடி, தாம்பரத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.

சென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகளால் வழக்கமான போக்குவரத்து பாதிக்கப்படுகிறதா என்பதை ட்ரோன்கள் மூலம் போலீஸார் கண்காணித்தனர்.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சென்னை, தாம்பரம், ஆவடியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நீர்நிலைகளுக்கும் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால், தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடந்து முடிந்தன.

இதையடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் உள்பட அனைத்து போலீஸாருக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குறிப்பாக காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு பாராட்டுத் தெரிவித்ததுடன், அனைத்து போலீஸாருக்கும் தனது சார்பில் பாராட்டுகளைத் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு) உட்பட அனைத்து போலீஸாருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE