சென்னை: பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கடந்த 2019 மக்களவை தேர்தலை அதிமுக சந்தித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. வரும் 2024 மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கும் என்றே இருதரப்பு தலைவர்களும் கூறிவந்தனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திலும், அதிமுகவை பிரதான கட்சியாக அங்கீகரித்து பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது அருகில் பிரதமர் நரேந்திர மோடி அமரவைத்தார். அந்த அளவுக்கு தேசிய அளவில் அதிமுகவுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பாஜக அழைப்பை ஏற்று டெல்லி சென்ற பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசித்த பின்னர், அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு மாறத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
» “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது” - ஜவாஹிருல்லா கருத்து
» “தங்கமே.. தங்கமே..” - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!
இதற்கிடையே, அண்ணா குறித்துதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது விவாதப் பொருளாக மாறியது. அதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா குறித்து தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறிய நிலையில், ‘‘பாஜகவுடன் கூட்டணி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் கடந்த 22-ம் தேதி டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதை நட்டா ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, ‘‘பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என்றுதான் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புகின்றனர். இந்த முடிவை கடந்த 2021-ம் ஆண்டே எடுத்திருந்தால், தொடர்ந்து 3-வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும்’’ என்று நிர்வாகிகள் பலர் நேரடியாக பேசியுள்ளனர்.
கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மாநில தலைமை, கடந்த ஓராண்டாக திட்டமிட்டே,வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களது கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஆகியோரை அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
கடந்த ஆக.20-ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் பொதுச் செயலாளர் பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இது தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது நடந்து முடிந்த ஆலோசனைக் கூட்டத்தில்,‘2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணம், விருப்பம், உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது’ என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் இணைந்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் கொண்டாட்டம்: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானதும், தலைமை அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல முடிவை எடுத்திருப்பதாக கோஷமிட்டனர்.
கூட்டத்துக்கு பிறகு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் அண்ணனும், திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான வீரபெருமாள் நயினார் மற்றும் திமுகவில் இருந்து விலகிய திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன் ஆகியோர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சந்தேகமே வேண்டாம்: இபிஎஸ் உறுதி
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, ‘‘பாஜகவுடன் கூட்டணி இல்லை என நாம் முடிவு செய்துள்ள நிலையில், இனி எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார். 2024 மக்களவை தேர்தல் மட்டுமின்றி, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. கட்சியின் இந்த நிலைப்பாட்டை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் சிறுபான்மை மக்களை சந்தித்து உறுதியாக தெரிவிக்க வேண்டும். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால், கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி சொல்ல வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமை முடிவெடுக்கும்: அண்ணாமலை தகவல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் 2-வது நாளாக நேற்று ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். கோவை கணபதி பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை அவர் தொடங்கினார். வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அதிமுக தீர்மானத்தை படித்தேன். பாஜக ஒரு தேசியக் கட்சி என்பதால், இதுகுறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைமை சரியான நேரத்தில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும்’’ என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago