எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது பலனளிக்குமா? - சட்ட நிபுணர்கள் கருத்து

By க.சக்திவேல்

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது பலனளிக்குமா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, “எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதி கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ.7.80 கோடி செலவாகும்” என மத்திய அரசு தெரிவித்தது.

இதில், 228 எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 நீதிமன்றங்களும், எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா 1 நீதிமன்றமும் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மாநில அரசுகள் தங்கள் மாநில உயர் நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றங்கள் 2018 மார்ச் 1-ம் தேதி முதல் செயல் பட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு: ஏற்கெனவே சில வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது போடப்பட்ட ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை எதிர்த்து அவர் போட்ட வழக்கு முடிவதற்கே 3 ஆண்டுகள் ஆயின. பின்னர் பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்து அதன்மீது பெற்ற உத்தரவுகள் மீது மேல்முறையீடுகள் செய்ததன் மூலம் அந்த வழக்கு முடிய 19 ஆண்டுகள் ஆனது.

நம் நாட்டில் விஐபி-க்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். அவற்றில் பல நூறு அரசியல்வாதிகள் மீது வழக்குகள் நிலுவையிலிருக்கும். இவற்றை விசாரிக்க 12 நீதிமன்றங்கள் மட்டுமே என்பது கடலில் கரைத்த பெருங்காயம்தான். சிறப்பு நீதிமன்றங்களால் மட்டுமே விரைவில் தீர்வு காணமுடியுமென்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்: எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சிறப்பு நீதிமன்றங்களில் அளிக்கப்படும் உத்தரவுகளை எதிர்த்து அரசியல்வாதிகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இழுத்தடிப்பார்கள். எனவே, மேல்முறையீடு செய்தாலும் அதையும் சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் சிதைக்கப்பட்டுவிடும்.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி: பல அரசியல்வாதிகள் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி 5 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிடுகின்றனர். பிற்காலத்தில் அவர் கள் தண்டிக்கப்பட்டாலும், அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 30 சதவீதத்துக்கு மேலான எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே நிலைதான் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் உள்ளது. எனவே, அவர்கள் மீதான வழக்குகளை தனியே பிரித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது வரவேற் கத்தக்கது.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன்: உச்ச நீதிமன்றத்தின் எண்ணம் சரியானது. ஆனால், அவ்வாறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தால் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய வழக்குகளை விசாரிக்க தனியாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வழக்குகளை விசாரிக்க தனியாகவும் நீதிமன்றங்கள் தேவைப்படும். எனவே, அதற்கு தகுந்தாற்போல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு, பதவியில் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்கள் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குகளில் சிக்க வைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன்: சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தாலும் வழக்குகளை நடத்த விடாமல் செய்வதற்கான முயற்சிகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து வழக்குகளை முடிக்க வேண்டும் என்று கூறினாலும், சட்ட வழிமுறைகளை மீறி அவற்றை விரைந்து தீர்க்க இயலாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பணம், அதிகாரம் பலம் குறைந்த அரசியல்வாதிகள் வேண்டுமானால் தண்டிக்கப்படலாம். பலம் பொருந்திய அரசியல்வாதிகள் இதைப் பற்றி கண்டுகொள்ளமாட்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்