சென்னை - நெல்லை ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடக்கம்: தென் மாவட்ட பயணிகள் உற்சாகமாக பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர்-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயணிகள் சேவை நேற்று தொடங்கியது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள், இதில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இவற்றுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதற்கிடையில், நெல்லை-சென்னை எழும்பூர், விஜயவாடா-சென்னை சென்ட்ரல், காசர்கோடு-திருவனந்தபுரம் உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். இவற்றில், சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை, தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி இடையே பகலில் விரைவு ரயில் சேவை இல்லாத நிலையில், வந்தே பாரத் ரயில் சேவை பயனுள்ளதாக உள்ளது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர்-நெல்லை ‘வந்தே பாரத்’ ரயில் சேவை நேற்று பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்கியது. இந்த ரயிலை கே.திருவேங்கடம், உதவி ஓட்டுநர் எம்.ஜி.சம்பு ஆகியோர் இயக்கினர். ரயில் கார்டாக ஏ.பி.அறிவொளி செயல்பட்டார்.

முன்னதாக, எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த வந்தே பாரத் ரயில் முன் பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்பு, ஏசி சேர் கார் வகுப்புகள் நிரம்பியிருந்தன.

ரயில் பயணம் குறித்து விருதுநகரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சக்கையா கூறியதாவது: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வணிகம் சம்பந்தமாக வந்து செல்பவர்கள், அரசு, தனியார் நிறுவன அதிகாரிகள், பணியாளர்களுக்கு இந்த ரயில் மிகவும் உதவியாக இருக்கும். விமானத்தில் இருப்பது போன்ற வசதிகளை வந்தே பாரத் ரயில் கொடுக்கிறது.

சென்னையில் பணியை முடித்து, இந்த ரயிலில் ஏறினால் இரவு வீட்டுக்குச் சென்றவிடலாம். மறுநாள் புத்துணர்ச்சியோடு பணியை தொடங்கிவிடமுடியும். தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையைச் சேர்ந்த லாவண்யா கூறும்போது, “இந்த ரயிலில் அனைத்து வசதிகளும் உள்ளன. ரயிலின் உள்பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளது. எனவே, அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க முடியும்” என்றார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி என்.சத்தியநாராயணன் கூறும்போது, “சென்னை- விழுப்புரத்துக்கு உணவின்றி ரூ.550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் சற்றே அதிகமாக உள்ளது. எனவே, கட்டணத்தை சிறிது குறைக்க வேண்டும். அவசரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வந்தே பாரத் ரயில் உதவியாக இருக்கும்” என்றார்.

டிக்கெட் முன்பதிவு: மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் ஒரு எக்ஸிகியூடிவ் சேர் கார் பெட்டியும் (44 இருக்கைகள்), 7 ஏசி சேர் கார் பெட்டிகளும் (தலா 78 இருக்கைகள்) உள்ளன. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு அறிவித்த உடனேயே, ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவும், தீபாவளிப் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவும் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்