‘நன்றி மீண்டும் வராதீர்கள்’ - பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஏன்?

By செய்திப்பிரிவு

சென்னை: “2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது” என்று அறிவித்துள்ள அதிமுக, ‘#நன்றி_மீண்டும்வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேகை இணைத்துள்ளது. அதனை அதிமுகவினர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது.

அவ்வாறு கடந்த 14-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியுள்ளார். பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சுமார் 20 தொகுதிகளில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை பழனிசாமி ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை, கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாகக் கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.

அதன்பின், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22-ம் தேதி டெல்லி சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அண்ணாமலையின் பதவியைப் பறிக்க வலியுறுத்தியதாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இபிஎஸ் முழக்கம்: இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் ‘கூட்டணி இல்லை’, ‘கூட்டணி இல்லை’, ‘கூட்டணி இல்லை’ என மூன்று முறை முழங்கியதாக அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர்.

தீர்மானம் விவரம்: அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை’ சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட்கிழமை), கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மான விவரத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, “2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது” என்று அறிவித்துள்ள அதிமுக, ‘#நன்றி_மீண்டும்வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேகை இணைத்துள்ளது. அதனை அதிமுகவினர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலம், இனி வருங்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதியாகச் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்