“கட்சிக்காக உழைத்ததால் நல்ல வாய்ப்பு...” - புதுச்சேரி மாநில புதிய பாஜக தலைவர் செல்வகணபதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாஜக புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவராக தற்போதைய கட்சியின் மாநிலப் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுவை மாநிலத்தின் பாஜக தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான சாமிநாதன் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்பட்டு வந்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் வரை இப்பொறுப்பில் இருந்தார். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் மாற்றம் இருப்பது வழக்கம். ஆனால், அதிகளவாக இப்பதவியை அவர் வகித்து வந்தார். மாநிலத் தலைவர் பதவிக்கு பலரும் முயற்சித்து வந்தனர்.

இந்தநிலையில், பாஜக புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவராக தற்போதைய கட்சியின் மாநிலப் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை புதுவை மாநில பாஜக தலைவராக அறிவித்து கட்சியின் தேசியத் தலைவர் நட்டா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கல்வியாளரான செல்வகணபதி எம்.பி., ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் நெருக்கமானவர். ஏற்கெனவே பாஜக நியமன எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது மாநிலத் தலைவராகியுள்ளார்.

மாநிலத் தலைவர்களாகும் எம்பிக்கள்: புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஏ.வி.சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு அக்கட்சியின் புதுவை மக்களவை உறுப்பினரான (எம்.பி.) வைத்திலிங்கம் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தேசியக் கட்சியான பாஜகவிலும் எம்.பி.யாக உள்ள செல்வகணபதியே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வகணபதி பேட்டி: புதிய பொறுப்பு தொடர்பாக எம்.பி.செல்வகணபதியிடம் கேட்டதற்கு, "நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட விருப்பம் உள்ளது. தேசியக் கட்சித் தலைவர்கள்தான் இறுதி முடிவு எடுப்பார்கள். பாஜகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தோருக்கு நல்ல வாய்ப்பு அளிக்கும். அதற்கு நானே உதாரணம். முதலில் எம்எல்ஏ, பிறகு எம்.பி தற்போது மாநிலத் தலைவர் பதவியை பாஜக தலைமை தந்துள்ளது. பாஜகவில் இரு பதவி தருவது வழக்கம்தான். ஏற்கெனவே தேசியத் தலைவர் நட்டா உதாரணம்.

பாதயாத்திரை, கூட்டங்கள் என கட்சி வளர்ச்சிக்கு முயற்சி எடுப்பேன். மூத்தத் தலைவர்கள் யோசனையும் வளர்ச்சியையும் கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்துவேன். தகுதிக்கு ஏற்ப பொறுப்புகளும் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் சலசலப்பு இருந்தாலும் கூட்டணி முறியவில்லை. முடிவை தேசியத் தலைவர்கள்தான் எடுப்பார்கள். அவர்கள் முடிவை செயல்படுத்துவோம். நாங்கள் முடிவு எடுக்க முடியாது. புதுச்சேரியில் சரியான உறவு கூட்டணியிலுள்ளது.

வாரியத் தலைவர் பதவிகளை எம்எல்ஏக்களுக்கு தருவதை முதல்வர், அமைச்சர்கள் ஒன்று கூடி முடிவு எடுக்கவேண்டும். தேர்தலுக்கு முன்போ, பின்போ முடிவு எடுக்கப்படும். தகுதியானோருக்கு தரப்படும். தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் புதுச்சேரி வருவார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரோ, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக இருப்பார்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதன் கூறுகையில், "புதியத் தலைவருக்கு வாழ்த்துகள். கடந்த டிசம்பர் 2015 முதல் தற்போது வரை மாநிலத் தலைவராக பதவி ஏற்று கட்சி வளர்ச்சியில் முழு பங்கெடுத்து வருகிறோம். கட்சி வளர்ச்சிக்கு என்னுடன் இணைந்து பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. எதிர்காலத்தில் கட்சி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட்டு புதியத்தலைவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE