பறையம்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையம்: தவியாய் தவிக்கும் மழலைகள்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: தமிழகத்தில் வாழும் வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு கட்டணத்துக்கு இணையாக, மழலையர் வகுப்புக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளில் சேர்த்து, ஆடல் பாடல்களுடன் பிள்ளைகளின் கல்வியை தொடங்கி வைக்கின்றனர்.

இவர்களை போன்று, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் ஆடல், பாடலுடன் கல்வியை தொடங்க, அங்கன்வாடி மையங்களை (குழந்தைகள் மையம்) தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இக்குழந்தைகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்மாதிரியாக பல அங்கன்வாடி மையங்கள் இயங்கும் நிலையில், ஒரு சில அங்கன்வாடி மையங்களின் நிலை படுமோசமாக உள்ளன. இந்த வரிசையில், திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் இடம்பிடித்துள்ளது.

அங்கன்வாடி மைய நுழைவு வாயில் அருகே சிமென்ட் ஓடுகள் அடுக்கப்பட்டும்,
மின்வயர்கள் தொங்கிய நிலையில் உள்ளன

அங்கன்வாடி மையத்தின் நுழைவு வாயிலில் உள்ள ‘குழந்தைகள் மையம்’ என்ற பெயர் பலகையை தாங்கிப் பிடிக்கும் சிமென்ட் தூண்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மாணவ, மாணவிகள் விளையாடியபடி பாடம் கற்றுக்கொள்ளும் அறை நுழைவு வாயில் முன்பு, மின் இணைப்புக்கு கொடுக்கப்படும் மின் வயர்கள் தொங்குகின்றன. மேலும், சிமென்ட் ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தனை அவலங்களை கடந்து, வகுப்பறை உள்ளே சென்றால், பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அங்கன்வாடி மையத்தின் வகுப்பறை தூசு மற்றும் ஒட்டடை படர்ந்து சுகாதாரம் இல்லாமல் கிடக்கிறது. நான்கு திசை சுவர்களும் அசுத்தமாக உள்ளன. மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை, மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார விளக்குகளும் அகற்றப்பட்டுள்ளன.

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மழலைகளுக்கான கழிப்பறை.

வகுப்பறையில் தொங்கவிடப்பட்டுள்ள மின்விசிறி இறக்கைகள் வளைந்து, புதிய கோணங்களில் காட்சி தருகிறது. அங்கன்வாடி மைய கட்டிடம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் குப்பை குவியல் மற்றும் மது பாட்டில்கள் உள்ளன. வகுப்பறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக, சுவற்றின் மீது இரும்பு கிரீல் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக, குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை மாணவர்கள் சுவாசிக்கும் நிலை உள்ளது.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள குழாய் சேதமடைந்துள்ளதால், தரையில் தேங்கி இருக்கும் தண்ணீரில், டெங்கு போன்ற நோய்களை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீரும் கிடையாது. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அங்கன்வாடி மைய சுவற்றின் அருகே ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்
குவிந்து கிடக்கும் குப்பை குவியல்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “பறையம்பட்டு அங்கன்வாடி மையத்தில் சுமார் 35 மழலைகள் படிக்கின்றனர். இவர் களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது. வகுப்பறை தூய்மை யாக இருப்பதில்லை. மின்சார வசதியும் கிடையாது. மின்வயர்களை குரங்குகள் துண்டித்துள்ளன. மேலும் வகுப்பறையில் உள்ள மின்விசிறி மீது அமர்ந்து, ஊஞ்சல் ஆடியும் அதன் இறக்கைகளை வளைத்தும் விட்டன. மின்வயர்கள் தொங்குகின்றன. சுகாதாரமான குடிநீர் வழங்குவதில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்துவது கிடையாது.

மேலும் வகுப்பறை கட்டிடம் அருகே உள்ள குப்பை மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக் காலத்தில் அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் புகுந்துவிடுகிறது. அங்கன்வாடி மையத்தை சீரமைத்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவ, மாணவிகளின் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தூய்மையாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE