நேவல் மருத்துவமனை சாலையில் ஆயுள் முடிந்த பொதுக் கழிப்பிடம்: இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்!

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் ஆயுள் முடிந்த நிலையில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தை இடித்துவிட்டு நவீன கழிப்பிடம் கட்ட வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த என்.மனோகரன் என்ற வாசகர், 'இந்து தமிழ் திசை' நாளிதழின் பிரத்தியேக அழைப்பு எண்ணான உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு கூறியதாவது: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 58-வது வார்டு, பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இதில் 6 மகளிர்கழிவறைகளும், 6 ஆண்கள் கழிவறைகளும் உள்ளன. இந்த பொதுக் கழிப்பிடத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதால், சுவர்கள் பெயர்ந்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது பல கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

அந்த அடைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் காலத்தோடு நீக்குவதுமில்லை. இதனால் அப்பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் பலர் கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்கஇந்த பொதுக்கழிப்பறையை நம்பியுள்ளனர். இப்பகுதி சுகாதாரமாக இருப்பதற்கு இந்த கழிப்பறைகள் தான் காரணம். அவற்றை முறையாக பராமரிக்காவிட்டால் இப்பகுதி சுகாதாரக்கேடால் பாதிக்கப்படும்.

அதனால் இந்த பழைய பொதுக்கழிப்பிடத்தை இடித்துவிட்டு, புதிய நவீன கழிப்பறைகளை கட்டுமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை மாநகராட்சி ஆணையர்கள் மாறும்போதும், கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம்.

ஆணையர்கள், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடத்தை கட்டுமாறு அறிவுறுத்துகின்றனர். ஆனால் கீழ் நிலை அதிகாரிகள் நவீன கழிப்பிடம் கட்ட முன்வருவதில்லை. எனவே, இப்பகுதிகளில் புதிதாக பொதுக் கழிப்பிடங்களை கட்ட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த பொதுக் கழிப்பிடத்தில் தற்காலிகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இதை இடித்துவிட்டு நவீன கழிப்பிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE