பள்ளங்களால் பள்ளங்கரணை ஆன பள்ளிக்கரணை: தொடர்கதையாகும் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

சென்னை: மழைக்காலம் நெருங்கி வரும்நிலையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வேளச்சேரி – தாம்பரம் சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வேளச்சேரி – தாம்பரம் சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்முதல் மேடவாக்கம் சந்திப்பு வரை3.8 கிமீ தூரம் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வாகன நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, வேளச்சேரி–தாம்பரம் மார்க்கத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதல் பெரும்பாக்கம் செல்லும் ரைஸ்மில் சாலை சந்திப்பு வரையிலான பகுதியில், சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்தநிலையில், நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரிநீரை கொண்டுவந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விடுவதற்காக கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் இணைப்பு பணிக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

மின்சார கேபிள் பதிப்பதற்கும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் இப்பகுதியை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் காமகோடிநகர் சந்திப்பு அடுத்த நாராயணபுரம் அம்மா உணவகம் முதல்,ஐஐடி காலனி சந்திப்பு வரையிலான சாலையில் மாடுகள் அதிகம்நடமாடுகின்றன. வாகன நெரிசலுக்கு இதுவும் காரணமாகிவிடுகிறது.

இதேபோல, எதிர்புறம் தாம்பரம் – வேளச்சேரி சாலையில், சிட்டிபாபு நகர் பிரதான சாலையை அடுத்த, நாராயணபுரம் சென்னை தொடக்கப் பள்ளி அருகில் இருந்து காமகோடி நகர் வரையிலான 1.3 கிமீ தூரம் முழுவதும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது இப்பகுதியில், சென்னை தொடக்கப் பள்ளி முன்பாக இருந்த கிணறு அகற்றப்பட்டு, நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் அப்பகுதியில் அமைக்கப்படுகிறது.

கடந்த பல மாதமாக வெயில்அடித்தபோது, எந்த முன்னேற்றமும் இல்லாமல் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே குறுகலான இப்பகுதியில், மழைநீரும் தேங்கியுள்ளதால், வாகனஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மழைக்காலங்களில், சிட்டிபாபு நகர் பிரதான சாலை சந்திப்பில் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வேளச்சேரியில் இருந்து தாம்பரம், மேடவாக்கம் செல்வதற்கு இந்த சாலை மட்டுமேஉள்ளது. தற்போது சாலை தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெற்றாலும்கூட, மழைக்காலம் நெருங்கும் சூழலில் பணியை விரைவாக முடித்தால் மட்டுமே பொதுமக்களின் சிரமம் தவிர்க்கப்படும்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள்மோசமாக உள்ளதாக முதல்வர்ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்ததுடன், சாலைகளை சீரமைக்குமாறும், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். அந்த பட்டியலில் இந்த சாலையும் இடம்பெறுமா என்பது பள்ளிக்கரணை பகுதி மக்கள் மட்டுமின்றி, அதைகடந்து செல்பவர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE