குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலினும் ஏற்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால், விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், `தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்’, காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமாரே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தன்னுடைய ஆட்சியின் கெத்தை காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன், கடந்த ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட்ட ஸ்டாலின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே பாசனத்துக்கு தண்ணீர் தேவையை அறிந்து, நம்முடைய காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெறாமல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இன்றி, பயிர்கள் கருகிய பிறகு, ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல்’, நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகு, காலம் கடந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரைப் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு மற்றும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வது என்று காலதாமதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலின்.

குறுவை சாகுபடிக்கு அவர் காப்பீடு செய்யாததால், இன்று டெல்டா மாவட்டத்தில், ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜ்குமார், கருகிய தன்னுடைய நெற்பயிருக்கு காப்பீட்டு நிவாரணமும், அரசின் நிவாரணமும் பெறமுடியாத நிலையில், மனவேதனையில், தன்னுடைய இன்னுயிரை இழந்துள்ளார். கையாலாகாத இந்த திமுக அரசின் செயல்பாட்டால், இன்னும் எத்தனை விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமோ என்று, மக்கள் அஞ்சும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலினும் ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்துக்கு, உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இந்த அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்