நாமக்கல், சேலத்தில் வாகன சோதனை - அதிகாலையில் சினிமாவை மிஞ்சிய காட்சிகள்: வட மாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது - பறக்கும் கேமரா உதவியுடன் தேடுதல் வேட்டை; 2 கார், லாரி, துப்பாக்கி தோட்டா, ரூ.2.93 லட்சம் பறிமுதல்

By கி.பார்த்திபன்

நாமக்கல் மற்றும் சேலத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகாலைவேளையில் போலீஸ் வாகனம் மீது மோதிவிட்டு காரில் தப்ப முயன்ற கொள்ளை கும்பலை போலீஸார் விரட்டிச் சென்று, பறக்கும் கேமரா உதவியுடன் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரகசிய தகவல்

கரூர் மாவட்டம் அரச்சலூரில் இருந்து வட மாநிலத்தைச் சேரந்த கொள்ளை கும்பல் ஒன்று நேற்று அதிகாலை 2 காரில் பரமத்தி வேலூர், நாமக்கல் வழியாக தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம்.ராமசாமி, எஸ்.சதீஸ் ஆகியோர் தலைமையில் 3 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தனித்தனி குழுக்களாக பிரிந்து மாவட்ட எல்லையான பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3.30 மணியளவில் வெளிமாநில பதிவெண் கொண்ட 2 கார்கள் அதிவேகமாக கீரம்பூர் சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டது. அதில் ஒரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மற்றொரு கார் அங்கிருந்த சுங்கச் சாவடி தடுப்பை உடைத்துக் கொண்டு தப்ப முற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீஸார் காரை தடுக்க முற்பட்டனர். எனினும், காவல் துறையினர் தடுப்பையும் மீறி நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் இருந்தவர்கள் தப்ப முயன்றனர்.

அதிவேக விரட்டல்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான காவல் துறையினர் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். ஒரு கட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அருளரசு கார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசாமி கார் மீது மோதி அக்கும்பல் தப்ப முற்பட்டது. எனினும், தொடர்ந்து போலீஸார் விரட்டுவதைப் பார்த்த நபர்கள் நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் காரை நிறுத்திவிட்டு அருகே இருந்த பாலப்பட்டி கிராமத்தினுள் புகுந்து தலைமறைவாகினர்.

பறக்கும் கேமரா மூலம் தேடல்

அதிகாலை நேரம் பனிபடர்ந்து இருட்டாக இருந்ததால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் வந்த காரில் இருக்கை மீது 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதைக்கண்ட போலீஸார் தலைமறைவான கும்பல் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடும் என சந்தேகித்தனர்.

இதையடுத்து பாலப்பட்டி கிராமத்தைச் சுற்றிவளைத்து கிராம மக்கள் உதவியுடன் பறக்கும் கேமராவைக் (ஹெலி காமிரா) கொண்டு தேடினர். அங்கிருந்த சோளக்காட்டில் பதுங்கி இருந்த இருவர் மற்றும் அங்குள்ள வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த மற்றொரு நபரை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

ஏடிஎம் கொள்ளையர்கள்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்டாக் (32), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுபேர் (19), புதுடெல்லி ராஜ்தானியைச் சேர்ந்த ஜூல்பிகார் (25) எனத் தெரியவந்தது. மேலும், கீரம்பூர் சுங்கச்சாவடியில் மற்றொரு காரில் சிக்கிய ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் (எ) முபாரிக் (30), ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாநிலத்தைச் சேர்ந்த அமித்குமார் (25) எனத் தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து 2 கார் மற்றும் 2 துப்பாக்கித் தோட்டா, ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். திரைப்பட பாணியில் கொள்ளை கும்பலை காவல் துறையினர் விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கிரிமினல் டூர்’

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் அர.அருளரசு ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘கேரள மாநிலத்தில் இருந்து வட மாநில கொள்ளை கும்பல் ஒன்று காரில் வருவதாக கோவை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

போலீஸார் விரட்டுவதை அறிந்து காரில் இருந்த கும்பல் பொம்மைக்குட்டைமேட்டில் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள கிராமத்தினுள் புகுந்தனர். இருட்டாக இருந்ததால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவியது. பின், விடிந்ததும், கிராம மக்கள் உதவியுடன் அவர்களைப் பிடித்தோம்.

அனைவரும் கோவை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர். வட மாநிலத்தில் இருந்து ‘கிரிமினல் டூர்’ வரும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கோவை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என அம்மாவட்ட காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடித்த பணத்தில் கேரளாவில் சுற்றிவிட்டு மீண்டும் தமிழகத்தில் நுழைந்துள்ளனர். அவர்களது திட்டம் குறித்து விசாரணையில் தான் தெரியவரும்’ என்றார்.

சேலத்தில் 3 பேர் கைது

இதேபோன்று சேலம் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீஸார் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் நேற்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மஹராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீன், சுதர் என்ற சுரேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோசம்கான் ஆகிய மூவர் இருந்தனர். லாரியில் ஸ்குரு டிரைவர், இரும்பு கம்பிகள் மற்றும் ரூ.93 ஆயிரம் பணம் இருந்தது.

அவர்களுக்கு கோவை ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவை காவல் உதவி ஆணையர் பாண்டியன் தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்து கோவை அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து மினி லாரி, ஸ்குரு டிரைவர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள், ரூ.93 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பவாரியா வேட்டையில் எஸ்.பி.

கடந்த 2000-ம் ஆண்டில் தமிழகத்தில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட பவாரியா கும்பலைப் பிடிப்பதற்கு காவல் அதிகாரி ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸாரை எச்சரித்த துப்பாக்கி தோட்டா

மர்ம கும்பல் வந்த காரில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு கூறும்போது, “சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரின் இருக்கை மீது துப்பாக்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போலீஸார் உஷார் அடைந்தனர். எங்களிடம் துப்பாக்கி உள்ளது என எச்சரிக்கை செய்வதற்காக அந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து குற்றவாளிகளைத் தேடுவதை விட்டுவிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினோம். மேலும், கும்பல் தாக்குதல் நடத்தினால், திருப்பி தாக்குவதற்காக ஆயுதங்களைத் தயார்படுத்தினர். இதன்பின்னரே மூவரையும் பிடித்தோம். அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனாலும், அவர்கள் துப்பாக்கியை வீசியெறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அங்கு தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது.

தேடுதலின்போது காரின் ஆர்சி புக் கிடைத்தது. கும்பலிடம் இருந்த துப்பாக்கி குண்டு உயிரை பறிக்கக் கூடியது கிடையாது. எனினும், மார்பில் சுட்டால் உயிரை பறித்துவிடும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்