நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் மேலும் சில இடங்களில் நின்று செல்ல பரிசீலனை: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் மேலும் சில இடங்களில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நெல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதே ரயிலில் நேற்று மாலை திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து புறப்பட்ட ரயிலை அவர் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2009-14 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.800 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே வேளையில், பாஜக ஆட்சியில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 75 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க பரிசீலிக்கப்படும். முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்க வாய்ப்பில்லை. இந்த ரயில் தற்போது 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மேலும் சில இடங்களில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE