திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

By த.அசோக் குமார்

திருநெல்வேலி: திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை பயணித்தார்.

ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், திருநெல்வேலி, மதுரை வழித்தட மக்கள் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாடு முழுவதும் இன்று 9 வந்தே பாரத் விரைவு ரயில்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வந்தே பாரத் ரயில் மூலம் அதிவேகமாக சென்னை சென்றடைய முடியும்.

வந்தே பாரத் ரயிலானது உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 2009 முதல் 2014 வரை ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தக்கு இந்த ஆண்டு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர ராமேசுவரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை ரயில் நிலையங்களை சீரமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE