மின் கட்டண கோரிக்கைகள் ஏற்கப்படாததால் நாளை கதவடைப்பு போராட்டம்: தொழில்துறையினர் முடிவு

By செய்திப்பிரிவு

கோவை: மின் கட்டணம் தொடர்பான கோரிக்கைகள் அரசு சார்பில் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் (எம்.எஸ்.எம்.இ) தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் கூறியதாவது: எல்டி 3பி இணைப்பு 0-112 கேவி நுகர்வோர்கள் முன்பு இருந்ததை போல் ஒரே பிரிவில் வைத்து கேவி ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.154-ஆக ( 430 சதவீதம் ) உயர்த்தப்பட்டதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான காரணம் பேட்டையில் உண்ணா விரதம் மேற்கொண்டோம்.

நாளை (செப்.25) கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அன்றைய தினமே அறிவித்திருந்தோம். நேற்று தமிழக முதல்வர் மின்கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே நாளை கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்கள் நாளை மூடப்படும். கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63 ஆயிரம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் அருள் மொழி(ஓஸ்மா), சிவக்குமார் (காட்மா) ஆகியோர் கூறும் போது, ‘‘அரசுக்கு நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாளை தமிழகம் முழுவதும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கவன ஈர்ப்பு கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,’’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE