முதல்வர் தொகுதியில் போராட்டம் நடத்திய கேங்மேன்களுக்கு சம்மன் வழங்கும் முயற்சியை கைவிடுக: இபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ”திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணி செய்வதற்குத் தேவையான உடல் தகுதியுள்ள ஆட்கள் தேவைப்பட்டதால், `கேங்மேன்’ என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி, கேங்மேன் பதவிக்காக 2019-ஆம் ஆண்டு உடற்கூறு தகுதித் தேர்வினை (Physical Test) 100 சதவீத நேர்மையுடன் அதிமுக அரசு நடத்தியது.

இந்தத் தேர்வை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சிகளும், அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. கேங்மேன் பணிகளுக்கான உடற்கூறு தேர்வு ‘முழுமையாக ஒளிப் பதிவு செய்யப்பட்டதையும், 100 சதவீதம் நேர்மையுடன் நடைபெற்றதையும்’ அதிமுக அரசு விளக்கமாக எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் கேங்மேன் தேர்வுக்கு விதித்த தடையாணையை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, அதிமுக அரசு கேங்மேன் பணியிடங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் பணியினை வெளிப்படையாக நடத்தியது.

கரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு, அதிமுக அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது. தொடர்ந்து 5,237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழக சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான Code of Conduct அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

திமுக அரசு பதவியேற்றவுடன், அதிமுக அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தி திமுக அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர். அவர்களது தொடர் போராட்டத்தையடுத்து, தமிழ் நாடு மின்சார வாரியத் தலைவர், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முடிவு மின்சார வாரியத்தின் முழு பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும், தங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் வீண் காலதாமதம் செய்வதாக, போராடியவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் தெரிய வருகின்றன.

மேலும் 10.5.2023 அன்று மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், மின்சாரத் துறை பணியார்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையின் போது, அனைத்துத் தொழிற்சங்களும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அப்போதைய மின்துறை அமைச்சர், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதாக உறுதி அளித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அமைச்சர் கூறியபடி இன்றுவரை தங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால், தங்களது கோரிக்கையினை முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20.9.2023 அன்று கொளத்தூரில், முதல்வர் ஸ்டாலினுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது காவல்துறை அவர்களை கைது செய்தது. மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல் துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும், அரசு வேலை மற்றும் வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து, ஆட்சியின் இறுதிநாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இப்போதுள்ள அதே காவல்துறைதான் எங்களது ஆட்சியிலும் இருந்தது. ஆனால், அதிமுக அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது. யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் எனது தலைமையிலான அரசு ஈடுபடவில்லை.

திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்துக்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்