பாஜக எம்.பி.யின் பேச்சு குறித்து உரிமை குழு விசாரிக்க வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு கனிமொழி, திருமாவளவன் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக எம்..பி., ரமேஷ் பிதுரியின் அவதூறு பேச்சு குறித்து உரிமை மீறல் குழு விசாரிக்க வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: மக்களவைத் தலைவருக்கு கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி மக்களவையில் நடைபெற்ற சந்திரயான் வெற்றி தொடர்பான விவாதத்தின்போது, சக உறுப்பினரான டேனிஷ் அலி மீது அவதூறு மற்றும் வெறுப்பு கருத்துகளை பாஜக எம்.பி, ரமேஷ் பிதுரி தெரிவித்திருந்தார்.

அவர் தனது பேச்சில் மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். அது மக்களவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் குழு விசாரிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அளிக்கிறேன். அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதால் உரிமை மீறல் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் அனுப்பிய கடிதத்தில், ‘கடந்த 21-ம் தேதி ரமேஷ் பிதுரி எம்.பி, முன்வைத்த கருத்துகள் அனைத்தும் மக்களவையின் புனிதத் தன்மையை அப்பட்டமாக அவமதித்திருப்பது மட்டுமின்றி, உரிமை மீறல் செயலாகும். அவரது பேச்சுகள் எந்தவித சந்தேகமுமின்றி வெறுப்பு பேச்சாகவே இருந்தது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். இத்தகைய வெறுப்பு பேச்சை பேசிய அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE