உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும், அவர்களது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

தமது உறுப்புகளைத் தந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற உறுப்பு தான தின நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2008 செப்டம்பர் 23-ம் தேதி திருப்போரூர் அருகில் ஹிதேந்திரன் என்ற மாணவர் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர் மகனின் உறுப்புகளை தானம் செய்தனர். அவர்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்துப் பாராட்டினார்.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ம் தேதி உறுப்பு தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்ட நாளான செப். 23-ம் தேதியே உறுப்பு மாற்று தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று உறுப்பு  தான தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

உறுப்பு தானம் வழங்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது சிறுநீரகத்துக்காக 6,179 பேர், கல்லீரலுக்கு 449 பேர், இதயத்துக்கு 72 பேர், நுரையீரலுக்கு 60 பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 24 பேர், கணையத்துக்கு ஒருவர், கைகளுக்கு 26 பேர் காத்திருக்கின்றனர்.

2008 அக்டோபர் முதல் தற்போது வரை மொத்த உறுப்பு கொடையாளர்கள் எண்ணிக்கை 1,726. மொத்த முக்கிய உறுப்பு பயன்பாடுகளின் எண்ணிக்கை 6,327. திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் உறுப்பு கொடை வழங்கியவர்களின் எண்ணிக்கை 313. மொத்த முக்கிய உறுப்பு பயன்பாடு 1,242. மூளைச் சாவு அடைந்து, உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். செப். 23-ம் தேதி மனிதாபிமானத் துக்கும், மனிதநேயத்துக்கும் எடுத்துக்காட்டான தினமாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தலைவர்கள் வரவேற்பு: உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழகத்தில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு உறுப்பு தானம் செய்வோருக்கு இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது பாராட்டத்தக்க சிறப்பான நடவடிக்கை. தனது உறுப்புகளை கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காக்கும் ஈகையாளர்களுக்கு இதைவிட சிறப்பான மரியாதையும், அங்கீகாரமும் அளிக்க முடியாது.

பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. உடல் உறுப்பு தானம், மனித இனத்துக்கு கிடைத்த மாபெரும் வரம். மனிதகுல சேவைக்காக அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில், அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE