நிதி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் திட்டத்தை கொண்டு வருவோம் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தொகுதி எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: மகளிருக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றோம். அதில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், முத்திரைத்தாள் செலவில் 50 சதவீதம் தள்ளுபடி என்ற திட்டத்தை முதிலில் தொடங்கினோம்.

சிலர் நிதி இருக்கிறதா? இல்லையா? எப்படி கொடுப்பார் என்று நினைக்கலாம், பேசலாம். நிதி இருக்கிறதா? இல்லையா? என்று நிதியமைச்சருக்கும், நிதி செயலருக்கும் கண்டிப்பாக தெரியும். நிதி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் ஒரு திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்.

புதுச்சேரி மாநிலத்தில் முதலில் 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு தொகுதியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் உடனடியாக வர வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்.

எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டே இருப்பேன். 70 ஆயிரம் பேருக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகம் காட்டவில்லையே என்று. இப்போதுதான் அவர்கள் வேகம் காட்டியுள்ளனர். யாருக்கு ரூ.1000 நிதியுதவி பெற தகுதி இருக்கிறது என்று தெரிகிறதோ, அவர்கள் விரைவாக விண்ணப்பங்களை கொடுத்தால் அடுத்த மாதமே நிதி ஒதுக்கி கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் கொடுப்பது உங்களது கடமை.

கேஸ் மானியம் சிகப்பு அட்டைகளுக்கு ரூ.300, மஞ்சள் அட்டைக்கு ரூ.150 கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் கேஸ் வாங்குபவர்கள் யார்? மாதம் எத்தனை கேஸ் சிலிண்டர் வாங்கப்படுகிறது போன்ற சரியான விவரங்கள் கிடைக்கப்படவில்லை.

அந்த விவரங்கள் சில வாரங்களில் வந்துவிடும். அது வந்ததும் கேஸ் மானியம் உடனடியாக வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்துக்கும் நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுவிட்டது. அரிசிக்கான பணம் மாதந்தோறும் பயனாளர்கள் வங்கி கணக்கில் வந்துவிடுகிறது. அதுபோல் பட்டியலின மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைக்கான பணம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. நேரடியாக கொடுக்கப்படுவதால் அனைவருக்கும் தெரியும். ஆனால் பணம் வங்கிகளில் வருவதானால் பலருக்கும் அது தெரிவதில்லை.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எந்த கல்லூரிகளிலும் சென்று சேரலாம். அவர்களுக்கு செலவே இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 21 பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 37 பேருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு இருக்கிறது. மேலும் அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்ற உறுதிமொழியும் அரசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசு பள்ளியில் படித்துவிட்டு வருகின்ற மாணவர்களும் உயர்கல்வியில் சேர முடியும். அதற்காக பணம் கட்டி படித்தால்தான் படிக்க முடியும் என்று நினைக்க வேண்டாம்.

மக்களின் நலன், மாநில வளர்ச்சிக்காக எல்லா திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசும் நாம் கேட்கின்ற உதவியை செய்து கொண்டு வருகிறது. மேலும் உதவியை கேட்டுள்ளோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மத்திய அரசின் உதவிகளோடு புதுச்சேரி மாநிலத்தை நல்ல வாளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். புதுச்சேரியில் மகளிருக்கான திட்டம் செயல்படுத்துவதில் எங்கள் அரசுக்கு மிகுந்த மகிழ்ச்சி. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் ஒருசில நாட்களில் எல்லா பகுதி மக்களுக்கும் செயல்படுத்தப்படும். என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE