சென்னை: காந்தியடிகள் கொலையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டதற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை ஆர்எஸ்எஸ் உருவாக்கி வருகிறது. இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து நமது பண்பாடு, கலாசாரம், தமிழ் போன்ற தொன்மையான மொழிகள் ஆகியவற்றை காக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசத்துக்கும், மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும்போது தன்னலம், சுயவிளம்பரம் இல்லாமல் ஓடிச்சென்று துயர் துடைப்பவர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்தபோது ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களை 1963-ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.
நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர், உடமைகளை இழந்தபோது அவர்களை காப்பாற்ற ஓடிச்சென்றவர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களே. கரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். இதை தவிர நாடு முழுவதும் 1.5 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுய விளம்பரமின்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்.
» “கிராம மக்களை ஆலோசித்து திட்டங்கள் வகுக்கவேண்டும்” - கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலர் கருத்து
இந்த நிலையில், தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக-வின் ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.9.2023 அன்று வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இதன் மூலம் புல்புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்" என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
1948-ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 1966-ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல்.கபூர் கமிஷன் 407 ஆவணங்கள் 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்தது. அதில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை, இந்த கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014-ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 25.8.2016-ல் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜீன் சிங் ஆகியோரும் இதேபோல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங்க், தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ள இந்தப் பதிவை உடனே நீக்குவதோடு திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், திமுக ஐடி விங்க் மீது வழக்கு தொடரப்படும்" என்று ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago