சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை ஏற்று, மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டண முறைகளை மாற்றி அமைத்திடுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.24) திருப்பூர் மாவட்டம் வருகிறார். இந்தச் சூழலில் மின் கட்டணம் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, நாளை (செப்.25-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக திருப்பூர் தொழில்துறை அறிவித்திருந்தனர். தற்போது மின்சார நிலைக் கட்டணம் தொடர்பான ஆணை வெளியாகியிருந்தாலும் பீக் ஹவர் சலுகை அறிவிக்கப்படாததால் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
முதல்வரின் புதிய உத்தரவு தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multi Year Tariff) மின்கட்டண மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சமர்ப்பித்தது. இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.
» “உறுப்பு தானம் வழங்குவோருக்கு ஆகச் சிறந்த மரியாதை” - தமிழக அரசுக்கு அன்புமணி பாராட்டு
» ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வெற்று முழக்கமே தவிர, நடைமுறையில் சாத்தியம் இல்லை: வைகோ கருத்து
இதன்படி, TANGEDCOவிற்கு ஆண்டிற்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனைவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100 லிருந்து ரூ.75 எனவும் - 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, ரூ.325லிருந்து ரூ.150 எனவும்,- 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த மாதம் நிலையான கட்டணத்தை ஒன்றுக்கு ரூ.500லிருந்து ரூ.150 எனவும், 112 கிலோவாட்டுக்கு மேல் உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, மாதம் ஒன்றுக்கு ரூ.600 லிருந்து ரூ.550 எனவும், TNERCயின் ஒப்புதல் பெற்று மாற்றியமைக்கப்பட்டது.
இதன் பின்னர், தொழில் மேம்பாட்டிற்கான மேலும் நடவடிக்கையாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT IIIB) உச்சநேர (பீக் ஹவர்) நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்து ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழக அரசு வழங்குகிறது. இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல ஆண்டு மின்கட்டண ஆணையின் படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்ததமிழக முதலமைச்சர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூ லிருந்து 2.18 ரூ ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில்களின் நலம் காக்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், சிறுகுறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் 21.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன:
1. பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும்.
3. 12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago