துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ், தனது 2 வயது பெண் குழந்தை சந்தியாவுடன், கடந்த செப்.7-ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நடுவானில் குழந்தை சந்தியாவுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அங்குள்ள இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனையில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல் சிகிச்சை செய்ய தமிழகம் கொண்டுவர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டது.

இந்நிலையில், சந்தியாவுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாசக் கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

பெற்றோர் கோரிக்கை: இஸ்தான்புல் நகரிலிருந்து மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழகம் அழைத்து வர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர், சந்தியாவை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE