கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1,066 கனஅடி தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 1,066 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,066 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றின் கரையை கடக்கவோ, குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றங்கரை யோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையளவு: மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, பர்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையில் அதிகப்பட்சம் 60.20 மிமீ, போச்சம்பள்ளியில் 36.20 மிமீ, கிருஷ்ணகிரியில் 26 மிமீ, பர்கூரில் 14.20 மிமீ மழை பதிவானது. தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக ஒகேனக்கல் பகுதியில் 70.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதுதவிர, பாலக்கோடு பகுதியில் 69.20 மி.மீ., மாரண்ட அள்ளி பகுதியில் 33 மி.மீ., பென்னாகரம் பகுதியில் 25 மி.மீ. பதிவாகி உள்ளது. இதர சில பகுதிகளில் மிதமான தூறல் இருந்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE