நெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: நெல்லை - சென்னைக்கு இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய ரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ என்ற துரித ரயில் நாளை (செப்.,24) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி மத்திய ரயில்வே மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கடிதம் ஒன்றும் மந்திரியிடம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் கோவில்பட்டி. மேலும், சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தொழிலில் சிறந்து விளங்குவது கோவில்பட்டி தான். மதுரை கோட்ட ரயில்வே வருவாயில் மூன்றாம் இடத்தில் பெரும் பங்கு வகிப்பது கோவில்பட்டி நகரம். இந்த சிறப்பு மிக்க கோவில்பட்டி நகரில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ஆவணம் செய்யவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ரயில்வே மந்திரியும் கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தாக வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE