தமிழகத்தில் டெங்கு பாதித்த 343 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஆண்டுதோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்காள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுபோன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்தல் போன்ற பணிகள் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறையும், ஊரக உள்ளாட்சித்துறையும், நகர்ப்புர உள்ளாட்சித் துறையும் ஒருங்கிணைந்து மாவட்ட அளவில் 600க்கும் மேற்பட்ட அலுவலர்களை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தப்பட்டு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்படுத்திடவும், பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் 2012ஆம் ஆண்டு 13,204 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, இதில் 66 நபர்கள் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு 23,294 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, 65 நபர்கள் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர். தமிழக முதல்வர் இதுபோன்ற பாதிப்புகளை தமிழகம் சந்திக்கக் கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி போன்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் வாரியாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல்கள் தயார்செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 23,717 தற்காலிகப் பணியாளர்கள் தினசரி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பருவமழைக்காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்க்காக்கும் மருந்துகளும், இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவிகள், இரத்தக் கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுசுகாதாரத்துறையோடு இணைந்து உள்ளாட்சி அமைப்புகள், டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் பொதுப்பணித்துறை மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்து அந்தந்த அமைப்புகளின் சார்பில் கட்டப்படுகிற பொதுக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர்.

சென்னை மாநகரில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, ரூ.14.87 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரம், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 954 பணியாளர்கள், 2,324 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,278 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 23,717 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகங்கள் குறிப்பாக மகப்பேறு மருத்துவமனை வளாகங்களை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கடந்த வார கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்