சென்னை: மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது என்று மாநிலத் திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.22) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலும், மாநிலத் திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், நடப்பில் உள்ள ஆய்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன.
மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மூன்றாவது திட்டக் குழு கூட்டத்தில் முதல்வர் அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மாநிலத் திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்.பின்னர் இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியது: இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சனுக்கும், திட்டக்குழுவின் முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
» சனாதன சர்ச்சைப் பேச்சு | தமிழக அரசு, உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அதிலும் குறிப்பாக ஜெயரஞ்சன், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும் - மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மின் வாகன கொள்கை, தொழில் - 4.0 கொள்கை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, துணி நூல் கொள்கை, கைத்தறிக் கொள்கை,சுற்றுலாக் கொள்கை, தமிழக மருத்துவ உரிமைக் கொள்கை, தமிழக பாலின மாறுபாடு உடையோருக்கான நலக் கொள்கை - ஆகியவற்றைத் தயாரித்து நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள்.கழிவு மேலாண்மை கொள்கை, தமிழகத்தின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, நீர்வள ஆதாரக் கொள்கை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் கொள்கை, வீட்டு வசதிக் கொள்கை என்பன போன்றவற்றையும் விரைந்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.நான் மிக முக்கியமாகக் கருதுவது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள் தான்.
மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது. மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட - பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும் - உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது. இவை பற்றி எல்லாம் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக எழுதத் தொடங்கியது.
இல்லம் தேடிக் கல்வி என்பது கல்வியை பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டு வரவும் பயன்பட்டுள்ளது.மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது அனைவருக்கும் சுகாதாரம் என்பதை உறுதி செய்துள்ளது. வீட்டுக்கே அரசு செல்கிறது என்ற நிர்வாகப் பரவலாக்கல் நடந்துள்ளது. மருத்துவ உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டமானது - தமிழக மாணவர்களை கல்வியில், அறிவாற்றலில், திறமையில் , தன்னம்பிக்கையில் சிறந்தவர்களாக மாற்றி வருகிறது. பத்து லட்சம் பேருக்கு என்று சொன்னோம். ஆனால் 13 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு பயிற்சி வழங்கி இருக்கிறோம். மிகப் பெரிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி அறிந்து கொள்ள வேண்டிய திறமைகளை அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 183 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என நீங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
‘விடியல் பயணம் திட்டம்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆகியவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது என நீங்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.அதேபோல, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும் நீங்கள் அறிக்கை வழங்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தின் பயன்பாடு என்பதும் மிகமிக அதிகம். செலவினத்தின் அடிப்படையில் எந்தவொரு திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதை திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது.
இப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பேட்டி அளிக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான் பேட்டி தருகிறார்கள்.
முகநூலில் ஒருவர் எழுதி இருக்கிறார். "எங்கள் கிராமத்தில் 300 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அப்படியானால் எங்கள் கிராமத்துக்குள் 3 லட்சம் ரூபாய் வந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் எங்கள் கிராமத்துக்குள் வந்திருப்பதன் மூலமாக எங்கள் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது. எங்கள் கிராமத்து வளர்ச்சிக்காக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் எழுதி இருக்கிறார்.கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இப்படி, பல கோணங்களிலும் ஆராய்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம்.
மேலும், மிக முக்கியமான 2 வேண்டுகோள்களை உங்களிடம் வைக்க விரும்புகிறேன். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இருக்கிறது. மதிப்பீடு மற்றும் ஆய்வுத் துறை இருக்கிறது. இவற்றையும் இணைத்துக் கொண்டு மாநில திட்டக்குழு செயல்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம். பல்வேறு ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இவற்றை அரசுத் துறைகள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என்ற ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago