இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (செப். 22, 23) சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, வரும் 24, 25-ம் தேதிகளில் சில இடங்களிலும், 26, 27-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பத்தூரில் 10 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆகிய இடங்களில் தலா9 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE