காவிரி நதிநீர் விவகாரம் | கர்நாடகாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடக மாநிலத்துடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக மாநில அரசு மறுத்துவருகிறது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிடக் கோரி மனு அளித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் நேற்று முன்தினம் சென்னைக்குத் திரும்பினார்.

இந்நிலையில் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்றுகூறும்போது, ‘‘காவிரி நதிநீர்விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை என்பதே கிடையாது. பலஆண்டுகள் பேசியும், எந்தப் பலனும் இல்லாததால்தான் காவிரி நடுவர் மன்றத்தை நாடினோம். இனி எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்கும். தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆக்கப்பூர்வ வாதங்கள் முன்வைக்கப்படும்.

முதல்வர் டெல்லி செல்வாரா?: தமிழக எம்.பி.க்கள் மத்திய அமைச்சரை சந்தித்ததுபோல, கர்நாடக எம்.பி.க்களும் மத்திய அமைச்சரை சந்தித்து உள்ளனர். தமிழக முதல்வர் டெல்லி செல்வது தொடர்பாக, தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE