அனல் மின் நிலைய மின்சாதனப் பொருட்களில் முறைகேடு: 2-வது நாளாக வருமான வரி சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில், மின்சாதனப் பொருட்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு பெரிய கன்வேயர் பெல்ட்கள், கேபிள்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களை விநியோகிக்கும் 4 தனியார் நிறுவனங்களை கண்காணித்த வருமான வரித் துறை அதிகாரிகள், போலி ரசீது மூலம் அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் 40-க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் மூலம் பொய் கணக்கு காட்டியிருப்பதும், வரி ஏய்ப்பு செய்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்த பல்வேறு ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்து, எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்னும் ஓரிரு நாட்கள் நீடிக்கும் எனவும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்டுள்ள ஆவ ணங்கள், வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்களை முழுமை யாக தெரிவிக்க முடியும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE