கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்சார ஊழியர்கள் தர்ணா

By செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரிய பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், மின்வாரிய பணிகளைஇ-டெண்டர் முறையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக் கூடாது, கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகையை வழங்கவேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பங்கேற்ற சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன் கூறியதாவது: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தையே மூன்றாகப் பிரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மட்டுமின்றி, மின்வாரியப் பணிகளைஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையை அனுமதித்தால் நிரந்தர பணிஇல்லாமல் போகும். ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.202 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE